படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

ஒரு விவசாயியின் வணக்கம்!

வணக்கம்…

லமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்

-இது அய்யன் திருவள்ளுவர் வாக்கு.

உலகத்துக்கு எப்படியோ… இன்றைய தமிழகத்துக்கு சாலப் பொருந்தும் குறள் இது.

எனக்கென்ன நிலபுலன் இருக்கா… ஒண்ணுமே இல்லையே என்று எதற்கெடுத்தாலும் புலம்புபவன் ஒரு சோம்பேறி. அப்படிப்பட்ட சோம்பேறிகளைப் பார்க்கும்போதெல்லாம் இந்த நிலமாகிய நல்லவள் தனக்குள்ளே சிரித்துக் கொள்வாளாம்…

ஏன் தெரியுமா… ‘அட உதவாக்கரை… இதோ பரந்து விரிந்த இந்த பூமியில் எங்காவது ஒரு இடத்தை தேடிப்பிடித்து அதில் உன் உழைப்பைப் போடு.. உன்னை நான் கைவிடவே மாட்டேன். அது தெரியாமல் இப்படி சோம்பேறியாகவே காலத்தைக் கழிக்கிறாயே’ என்று நினைத்து நகைப்பாளாம்!

இருக்கிற வளங்களை முறையாகப் பராமரிக்காதவர்களில் அல்லது வீணடிப்பவர்களில் முதலிடம் தமிழர்களுக்குத்தான்!

விவசாயத்தின் அருமை தெரிந்த அவர்கள்தான், காலமாற்றங்களை அனுசரித்து, இருக்கிற இயற்கை வளங்களை கட்டு செட்டாகப் பயன்படுத்தி விவசாயத்தைக் காப்பாற்றத் தெரியாதவர்களாகவும் உள்ளனர்!

விவசாயம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. காரணம் கேட்டால் தண்ணீர் இல்லை.. மழை இல்லை என்கிறார்கள். ஆனால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும் காலங்களில் அதில் 10 சதவீதத்தைக் கூட சேமிக்கும் ஏற்பாடுகளைச் செய்து கொள்ளத் தவறுவது யார் தவறு? இந்த சின்ன கேள்விக்கு ஆட்சியாளர்கள், மக்கள் என யாரிடமும் பதிலில்லை.

உலகம் கற்காலத்தில் இருந்த காலத்திலேயே, விவசாயம் செய்து நாகரீக வாழ்க்கை வாழ்ந்தவன் தமிழன். ஆனால் அந்த தமிழகத்தில்தான் விவசாயம் வேகமாய் அழிந்து வரும் அவலம்.

தரிசு நிலங்களை தொழிற்சாலைகளுக்குத் தருவதை விட்டுவிட்டு, மீண்டும் மீண்டும் ஏரிகளையும் ஆற்றங்கரைகளையும் நன்செய் – புன்செய் நிலங்களையும் தாரை வார்க்கும் போக்கு தொடர்கிறது – விவசாயிகள் சம்மதத்துடன். இதன் விளைவை இப்போதே அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம்.

விவசாய விளைபொருட்களின் பெயர்கூடத் தெரியாத ஒரு தலைமுறையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்ற அவமானத்தை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு பதைக்கிறது.

உலகம் அழியம் என்பதற்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றனவோ இல்லையோ… ஆனால் என்றைக்கு விவசாயம் முற்றாக அழிகிறதோ அன்று உலகம் Clinically dead என்பதுதான் உண்மை… எதார்த்தம்.

இந்த ஒரு இணையதளத்தால் விவசாயத்தை காப்பாற்றிவிட முடியாதுதான். ஆனால் படித்தவர்களின் மனதில் விவசாயமும் ஒரு தொழில்தான்.. அதை அனுபவித்து செய்ய வேண்டும் என்ற உணர்வு வரவேண்டும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

என்ற வள்ளுவப் பெருமான் வாக்கிற்கிணங்க, எப்படி விவசாயம் செய்வது என்ற அறிவு முக்கியம்தான்.. ஆனால், அதைவிட முக்கியம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதும்.

எப்படி விவசாயம் சொல்லித் தருவது என்று கட்டுரைகள் எழுதுவதல்ல நம் நோக்கம். ஏட்டு சுரைக்காய நம்பாத தொழில் அது. விவசாயத்துக்கு எதிராக உள்ளதையெல்லாம் சுட்டிக் காட்டுவதும், முடிந்தால் அவற்றை நீக்கும் முயற்சியில் இறங்குவதுமே நம் நோக்கம்!

உழவைக் காக்க கை கொடுங்கள்…!

-விவசாயி

உங்கள் கருத்தை பகிருங்கள்

*