படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

தூர்ந்து போன காட்டாறுகள்.. கண்டு கொள்ளாத விவசாயிகள்!

மிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் எப்படியும் ஒரு காட்டாறு.. சிற்றோடை இருந்தே தீரும். அவைதான் விவசாயத்தின் நாடி நரம்புகள். கிணற்றுப் பாசனத்தை அல்லது நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வரும் உழவர்களுக்கு இதுதான் தலையாய நீராதாரம்.

வட மாவட்டங்களான வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த காட்டாறுகள் (கானாறு) பற்றி ரொம்பவே தெரிந்திருக்கும்.

ஆனால் இன்று எத்தனை கிராமங்களில் இந்தக் காட்டாறுகள் உயிரோடு இருக்கின்றன?

மழைக்காலங்களில் குறைந்தது தொடர்ந்து மூன்று மாதங்களாவது இந்த ஆறுகளில் தண்ணீரைப் பார்க்கலாம் முன்பெல்லாம். ஆனால் இன்றோ அப்படி ஒரு நிகழ்வே இல்லாமல் போய்விட்டது.

காரணம், யாரோ வேற்று கிரகவாசியல்ல… உள்ளூர்க்காரர்கள்தான். இந்த காட்டாறுகளின் பெரும்பகுதியை சுயநலம் காரணமாக ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள் சில விவசாயிகள். உள்ளூரில் கட்டப்படும் வீடுகள் அனைத்துக்கும் மணல் அள்ளப்படுவதும் இங்கிருந்துதான்.

விளைவு, கனமழை பெய்தாலும் இந்த காட்டாறுகள் வறண்டே காணப்படுகின்றன. அதையொட்டிய கிராமங்களின் நிலத்தடி நீரும் அதல பாதாளத்துக்குப் போய்விட்டது.

இந்த ஆறுகளைப் பராமரிப்பது அரசாங்கத்தின் வேலை என்று நினைத்து எல்லோரும் ஒதுங்கி நின்றால், நிச்சயம் எந்த முன்னேற்றமும் இருக்காது. அவரவர் ஜீவாதாரப் பிரச்சினையாக நினைத்து காட்டாறுகளை பராமரிக்கத் தொடங்கினால், கிராமங்கள் மீண்டும் நீர்வளத்துக்கு திரும்பும்.

பாக்கெட் சாராயம், டாஸ்மாக், இருக்கிற நிலங்களை ப்ளாட் போடும் முயற்சி என தள்ளாடிக் கொண்டிருக்கும் அடிமட்ட விவசாயிகளும், பணம், இயந்திரங்களை மட்டுமே நம்பிக்கிடக்கும் பணக்கார விவசாயிகளும் இதை உணர்வார்களா?

-விவசாயி

உங்கள் கருத்தை பகிருங்கள்

*