படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

வேளாண் டிப்ஸ்: பூச்சித் தாக்குதலிருந்து பயிர்களைக் காக்க…

சூரியகாந்தி விதையை இருப்பு வைக்காமல் விற்கப் பாருங்கள்!

சித்திரைப் பட்டத்தில் (ஏப்ரல்-மே) விதைத்த சூரியகாந்தி, அறுவடை செய்யப்பட்டு, விற்பனைக்கு வர ஆரம்பித்துள்ளது. இதனால் அக்டோபர் மாதம் முதல், நவம்பர் மாதம் வரை, ஒரு கிலோ சூரியகாந்தி விதை 40 ரூபாய் முதல், 42 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாக வாய்ப்பு உள்ளது. தீபாவளி மற்றும் இதரப் பண்டிகைகள் இருந்தாலும், எண்ணெய் இறக்குமதி காரணமாக, மேற்கொண்டு  விலையேற வாய்ப்புகள் இல்லை. எனவே, சூரியகாந்தி விதைகளை சேமித்து வைக்காமல், உடனே விற்பனை செய்துவிடுவது நல்லது.

சின்ன வெங்காயத்தை சேமித்து வைக்கலாம்!

நவம்பர் மாதத்துக்கு மேல் வெங்காயம் விலையேற வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, விவசாயிகள் தற்பொழுது, அறுவடை செய்யும் சின்ன வெங்காயத்தை சேமித்து, விற்பனை செய்யலாம்.

மேற்கு தமிழகத்தில் இப்போது அதிகம் விளைந்துள்ள சின்ன வெங்காயத்தில் ஒரு பகுதியை சேமித்து வைக்கலாம்.

பருத்திக்கு சீரான விலை!

தமிழகத்தில் புரட்டாசிப் பட்டத்தில் விதைத்து, ஜனவரி மாதம் முதல், பிப்ரவரி மாதம் வரையில் அறுவடை செய்யப்படும், நீண்ட இழையுடைய பருத்தி ரகங்கள், குவிண்டால் 4,200 ரூபாய் முதல், 4,700 ரூபாய் வரை விற்பனையாக வாய்ப்புகள் உள்ளன.

விலை ஓரளவு ஏறவோ… இறங்கவோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பருத்தி விலை சீராகவே இருக்கும்.

நெல்லுக்கு வேப்பங்கொட்டைக் கரைசல்!

தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழு மற்றும் தண்டுத்துளைப்பான் தாக்குதலும்; நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இலைப்பேன் தாக்குதலும் காணப்படுகிறது. வயலில் விளக்குப்பொறி வைப்பதன் மூலமாகவும், 5% வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிப்பதன் மூலமாகவும் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

சம்பா நெல் பயிரிடும் விவசாயிகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக… சூடோமோனஸை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்தல், நாற்றங்காலில் தூவுதல் மற்றும் வேர்ப்பகுதியை நனைத்து நடவு செய்தல்; அடியுரமாக வேப்பம் பிண்ணாக்கு உரமிடுதல், வேப்பங்கொட்டைக் கரைசல் தெளித்தல் போன்றவற்றைக் கடைபிடிக்கலாம்.

மாவுப்பூச்சிக்கு மஞ்சள்பொறி !

தற்பொழுது பயிர் செய்யப்பட்டுள்ள பருத்திச் செடிகளில் தர்மபுரி மாவட்டத்தில் இலைப்பேன் தாக்குதலும்; மதுரை மாவட்டத்தில் மாவுப்பூச்சித் தாக்குதலும் தென்படுகிறது. இவற்றை, மஞ்சள் ஒட்டுப்பொறி வைத்தும், மீன் எண்ணெய் சோப்புக் கரைசல் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் காணப்படும் சிவப்புக் காய்ப்புழு தாக்குதலை, இனகவர்ச்சிப்பொறி அமைத்து, கட்டுப்படுத்தலாம்.  இலைச் சுருட்டுப் புழுவுக்கு விளக்குப்பொறி !

புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிரில், இலைச்சுருட்டுப் புழுவின் தாக்குதல் தென்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி வீதம் வைத்து, தாய் அந்துப்பூச்சிகளை அழித்து கட்டுப்படுத்தலாம்.
-விவசாயி

Comments

  1. Melahail velum verpoochi kattupatuthuvathu appati

உங்கள் கருத்தை பகிருங்கள்

*