படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

கரும்பு விவசாயிகளை கதற வைக்கும் ரங்கராஜன் குழு பரிந்துரைகள்!

ரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் விதத்தில் புதிய பரிந்துரைகளை பொருளாதார நிபுணர் ரங்கராஜன் தலைமையிலான குழு. இந்த ரங்கராஜன் யார் என்று தெரிகிறதா… பணவீக்கம் இந்த ஆண்டு குறைவாக இருந்தால், அடுத்த ஆண்டு உயரும் என்று பலே ஜோசியம் சொன்ன நிபுணர். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவரும்கூட!

இவரது குழுவின் பரிந்துரைகள், கரும்புக்கு இதுவரை கிடைத்துவந்த பரிந்துரை விலைக்கு வேட்டு வைக்கப் போகிறது.

விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு முன்பு அமல்படுத்தப்பட்ட சில கட்டுப்பாடுகளை, இப்போது சர்க்கரை ஆலை அதிபர்களின் நலனைக் கருதி விலக்கிவிடப் பார்க்கிறது இந்த ரங்கராஜன் குழு.

அப்படி என்ன பரிந்துரைகள்?

1. கரும்புக்கு மாநில அரசு பரிந்துரை (எஸ்.ஏ.பி.) விலையை ரத்து செய்வது. அதற்கு பதில் சர்க்கரை மற்றும் துணை உற்பத்திப் பொருட்களின் மதிப்பில் விவசாயிகளுக்கு பங்கு கிடைக்கச் செய்யலாம்.

2. நியாயவிலைக் கடைகளுக்கு, சந்தை விலையை விடக் குறைவாக அரசு நிர்ணயிக்கும் விலையில் சர்க்கரையை விற்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை நீக்கிவிடலாம்.

3. சணல் பைகளில்தான் சர்க்கரையை மூட்டை கட்ட வேண்டும் என்கிற நிபந்தனை தேவையில்லை. சர்க்கரை ஆலைகளுக்கான அரசு நிர்ணயிக்கும் முன்ஒதுக்கீட்டுக் கரும்புவயல் எல்லைகள் தேவையில்லை.

4. இரு சர்க்கரை ஆலைகளுக்கு இடையே, குறைந்தது 15 கிலோமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தேவையில்லை.

5. எரிசாராயத்தை (மூலப்பொருள்) வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்கு மாநில அரசுகள் தடை விதிக்கக் கூடாது. உள்நாட்டுச் சந்தையில் எவ்வளவு சர்க்கரையை (நான்லெவி சுகர்) ஆலைகள் விற்கலாம் என்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசு நிர்ணயிக்கும் நடைமுறையையும் அகற்றிவிடலாம்.


இந்தப் பரிந்துரைகளில் ஒன்றுகூட விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. சர்க்கரை மற்றும் துணை உற்பத்திப் பொருட்களின் மதிப்பில் விவசாயிகளுக்கு பங்கு கிடைக்கச் செய்யலாம் என்பது விவசாயிகளை ஏமாற்றும் வேலை என்கிறார்கள் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். காரணம், மாநில அரசு பரிந்துரை விலை என்பது கட்டாயம் கொடுத்தே தீர வேண்டிய ஒன்று. ஆனால்  இந்த உற்பத்திப் பொருள்களின் மதிப்பில் பங்கு தருவதாகக் கூறப்படுவது முழுசாக ஏமாற்றுவதற்கான முதல் படி.

எந்த ஒரு சர்க்கரை ஆலையும், தங்களின் உண்மையான உற்பத்தி அளவையோ… அதில் கிடைக்கக்கூடிய உண்மையான லாபத்தையோ வெளியில் சொல்வதில்லை. கரும்பு மூலமாக சர்க்கரை மட்டுமல்ல… மொலாசஸ், மின்சாரம் என்று பல துணைப் பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால், இதையெல்லாம் லாபக்கணக்கில் நேரடியாக காட்டப்படுவதே இல்லை. வெறும் சர்க்கரையைத்தான் பல ஆலைகளும் கணக்கில் காட்டுகின்றன.

அடுத்து, இந்தப் பரிந்துரைகள் முழுமையாக தனியார் சர்க்கரை ஆலை அதிபர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார்தான் இந்தியாவில் மிகப் பெரிய சர்க்கரை ஆலை அதிபராம். அவருக்கு சாதகமாகவே பல பரிந்துரைகள் அமைந்திருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர் விவசாய அமைப்பினர்.

“இப்படி பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நஷ்டமடைய வைத்து, அந்த ஆலைகளையும், தனியார் சர்க்கரை ஆலைகள் அபகரிக்கும் நிலையை உருவாக்குவதே ரங்கராஜன் குழுவின் நோக்கம் போலிருக்கிறது. அனைத்து கரும்பு விவசாயிகளுமே தனியார் ஆலைகளை நம்பி இருக்க வேண்டிய நிலை உருவாக்கும் இந்தப் பரிந்துரைகளை ஆரம்பத்திலேயே தூக்கி எறிய வேண்டும்,” என கரும்பு விவசாயிகள் போராடத் தயாராகி வருகின்றனர்.

அது சரி… கரும்பு விவசாயம் என்பதை பேப்பரில் மட்டுமே பார்த்தவர்களின் பரிந்துரை எப்படி இருக்கும்…

கும்பகர்ண அரசின் காதில் இந்த கூக்குரல்கள் விழுமா!

-விவசாயி

உங்கள் கருத்தை பகிருங்கள்

*