படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

7 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளம் – விவசாயிகள் மகிழ்ச்சி


வேலூர்: கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பரந்து விரிந்த பாலாற்றில் வெள்ளம் வந்தது.

தமிழகத்தை கடந்து ஆந்திரத்தை நோக்கி நகர்ந்த நீலம் புயல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந் நிலையில் தமிழக எல்லையருகே உள்ள சித்தூர் மாவட்டத்தில் பாலாற்றில் பெருக்கெடுத்த மழைநீர் ஆந்திர எல்லையை தாண்டி தமிழகத்துக்கு வந்தது. கடந்த 7 ஆண்டுகளில் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது இதுவே முதல் முறை.

ஆந்திர அரசு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் பாலாறு மற்றும் சிறு ஓடைகளில் தடுப்பணைகள் கட்டி மொத்த தண்ணீரையும் தடுத்துவிட்டது.

இனி பாலாற்றில் தண்ணீரைப் பார்க்க முடியாத நிலைதான். இதை நம்பியிருந்த வயல்களும் வறண்டு காணப்பட்டன.

இப்போது நிலம் புயல் காரணமாக பெய்த கன மழையில் பாலாற்றில் ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணைகள் நிரம்பி பாலாற்றின் கிளை நதிகளில் வெள்ளம் வரத் தொடங்கியது.

இதனால் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருகே உள்ள பெண்டுத்தாங்கல், வீரவர்தாங்கல், கனகந்தாங்கல், பொம்மசமுத்திரம் ஆகிய 4 ஏரிகள் நிரம்பியுள்ளன. மேலும் பொன்னையாற்றை சுற்றியுள்ளப் பகுதிகளில் உள்ள சிறு ஏரிகள், குட்டைகள் நிரம்பி வருகின்றன.

ராணிப்பேட்டை, ஆம்பூர் பகுதிகளில் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இது அந்தப் பகுதி விவசாயிகளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

Comments

 1. குமரன் says:

  குமரன் says:
  Your comment is awaiting moderation.
  November 12, 2012 at 1:16 pm

  பாலாற்றில் நீர்ப்பெருக்கு என்பது மகிழ்ச்சியான செய்தி.

  பாலாறு உற்பத்தியாவது கர்நாடகா மாநிலம் நந்தி துர்க்கம் (nandi Hills ) என்ற மலையில்.

  கர்நாடகத்தில் 93 கிமீ தூரமும், ஆந்திர மாநிலத்தில் 33 கிமீ தூரமும், தமிழ்நாட்டில் 222 கிமீ ஓடி கடலில் கலக்கும் இடம், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் “கடலூர்” என்ற ஊர் ஆகும். (தெற்கே இருக்கும் கடலூர் மாவட்டத் தலைநகரான கடலூர் வேறு, அது துறைமுக நகரமும் கூட.) இந்தக் கடலூர் மாமல்லபுரத்துக்கும், மரக்கானத்துக்கும் இடையில் உள்ளது. இது வெகு அழகான கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது.

  கர்நாடகத்தில் பாஸ்தமங்கலம், ராமசாகர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

  ஆந்திரத்தில் பாயும் 33 கிமீ தூரத்தில் புல்லூர் உள்ளிட்ட 32 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
  தற்போது குப்பம் என்ற இடத்துக்கு அருகில் கட்டப்பட்டு வருகிறது.

  நாமும் நம் பங்குக்கு, தமிழ் நாட்டில் பாலாறு நுழைந்த வுடன் வாணியம் பாடியிலும், ஆம்பூரிலும் தோல் பதப் படுத்திய சாய ரசாயனக் கழிவுகளைக் கலந்து பாலாற்றை குற்றுயிரும் கொலையுயிருமாக ஆக்கி விட்டோம். 1990 களில் பொது நல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் பயனாக கடந்த பத்தாண்டுகளில் மாசு சற்றே குறைந்து உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இல்லாவிட்டால் வாணியம்பாடி ஆம்பூர் தோல் ஏற்றுமதித் தொழிலதிபர்கள் இத்தனை நேரம் ஆற்றைக் கொன்று விட்டிருப்பார்கள்.

  தமிழ் நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உற்பத்தியாகும் செய்யாறு எனப்படும் சேயாறு (சங்க காலப் பெயர்) பாலாற்றில் காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் என்ற இடத்தில் கலக்கிறது.

  பாலாறு உற்பத்தி, அதன் வரலாறு, 1892 ஆண்டு ஒப்பந்தம், பாலாற்றின் நீர்ப்படுகைகள் குறித்து மிக விரிவான அருமையான ஆராய்ச்சிகளின் அடிப்படையிலான செய்திப்படம் இந்தத் தொடரில் உள்ளது. அன்பர்கள் நிச்சயம் பார்த்துப் பயனடைய வேண்டும்.

  பாலாற்றாங்கரை வாழ் மக்களின் நேர்காணல்களுடன் ஆதாரபூர்வமான செய்திப்படம் இது.

  கிராமத்து மக்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் எதார்த்தமாக எகனாமிக்ஸ் பேசுகின்றது என்பது கவித்துவமாக வெளிப்பட்டிருக்கும் படம் இது.

  தோல்தொழிலின் மாசுக் கழிவுகள், மணற்கொள்ளை, சாராய ஆலைகளின் கொள்ளை – கழிவுகள், பாட்டில் தண்ணீர் கம்பெனிகளின் கொள்ளை – ஆலைக் கழிவுகள் என்று தமிழ் நாட்டில் பாயும் 222 கிமீ தூரம் முழுவதும் பயணம் செய்கிறது இந்தப் படம்.

  My Name is Palaru by RR SRINIVASAN
  http://www.youtube.com/watch?v=mxksl0VgBOY
  http://www.youtube.com/watch?v=u39fvV4kE9I&feature=relmfu
  http://www.youtube.com/watch?v=8NnBtZYfT2o&feature=relmfu
  http://www.youtube.com/watch?v=bjwBz28a8CQ&feature=relmfu
  http://www.youtube.com/watch?v=hnwh_T1TqnQ&feature=relmfu
  http://www.youtube.com/watch?v=New6mqU1c1E&feature=relmfu
  http://www.youtube.com/watch?v=Fc54zocaCtI&feature=relmfu
  http://www.youtube.com/watch?v=4KfzEafe8UQ&feature=relmfu
  http://www.youtube.com/watch?v=Fn7FnPJV-a8&feature=relmfu

 2. குமரன் says:

  பாலாறு எனது வாழ்வில் பின்னிப் பிணைந்த நதி.

  வேலூருக்கு மேற்கே 15 கிமீ தொலைவில் இருக்கும் பாலாற்றங்கரைக் கிராமமான விரிஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் ஒரு முறை தொழும்போது சன்னிதியில் அடியவனுக்கு உதித்த பதினாறுவரிப் பாடலில் நாங்கு வரிகள் பாலாற்றில் நீர் வேண்டும் பகுதி. அது இதோ.

  நாலாறு மாதத்தில் ஒரு மாரி நிலை மாறிப்
  பாலாறும் வற்றாது நித்தமும் நீர்வேண்டிப்
  பத்தாறும் பற்றாதான் மார்க்கேசன்
  பதம் நாடிப் பற்றிக் கொள்.

உங்கள் கருத்தை பகிருங்கள்

*