படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

இ – ஃபார்மர்ஸ்… முயற்சித்தால் என்ன?

E-Farmers… இப்படி ஒன்று சாத்தியமா? நமது உணவு தேவையை பூர்த்தி செய்யும் கடவுள் என்ற முதலாளி கண்டெடுத்த தொழிலாளி நேரடியாக வயல்களில் விவசாயம் செய்யும் போது, இது என்ன புது விதமான விவசாயிகள் ?

கண்டிப்பாக இது எந்த ஒரு நிறுவனத்திற்கான‌ விளம்பர யுத்தி கிடையாது? விவசாய நிலங்களை கூறு போட்டு விற்று , நவீன ஜமீன்தார்களை உருவாக்கும் எண்ணமும் கிடையாது.

கிராமப்புறத்தில் இருந்து, பொருளாதார காரணங்களுக்காக, நகர்புறம், வெளி நாடுகளுக்கு குடி பெயர்ந்த, முதல் தலைமுறை, அல்லது அடுத்த தலைமுறை விவசாய பூர்விக குடும்பங்களை இணைக்க ஒரு மனப்பூர்வமான முயற்சி தான் E-Farmers ன் நோக்கம் .

ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை? அவனவன் வேலையை ஒழுங்கா பாத்துகிட்டு தானே இருக்கிறான். அது போதாதா?

ஆமாங்க, போதாது தான்… சும்மா விலைவாசியை பத்தி பேசிகிட்டு, ஃபாஸ்ட் -புட் சாப்பிட்டுக்கிட்டு, அப்பப்போ அரசியல் கதை பேசிகிட்டு, சினிமா, டிவி பாத்துக்கிட்டே இருந்தால், நாளைக்கு சாப்பாடு பற்றி யார் கவலை படுவது?

பங்குச் சந்தை, உலகப் பொருளாதாரம் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நம்மில் பலருக்கு, நமது உணவு பொருட்கள் விளைச்சல், அதைச் சார்ந்த நெருக்கடிகள், அதன் எதிர்காலம் பற்றி எந்த அளவு தெரியும்…?

எனக்கு இன்னும் விவசாயத்துடன் இருக்கும் தொடர்புகளினால், எந்த ஊர், நாடு சென்றாலும் அங்குள்ள விவசாயம் சார்ந்த விஷயங்களில் கவன ஈர்ப்பு, தானாகவே வந்து விடுகிறது.

பெங்களூர் புற நகர் மாவட்ட பகுதியில் சமீபத்தில் பார்த்த, தெரிந்து கொண்ட இரு விஷயங்களினால் மிகவும் மனம் பாதிக்கப்பட்டேன்.

1.இன்ஃபோஸிஸ் நிறுவனம் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்களை, நிறுவனத்தின் புதிய நிர்வாக வளாகத்திற்காக, தனித்தனி விவசாயிகளிடம் சிறு சிறு நிலங்களை வாங்கி சேர்த்துள்ளது.

2.ஏரியின் மடிப்பகுதியில், நல்ல நெல் விளையும் நிலம் , 4 அடி உயரத்திற்கு புல் கூட முளைக்காத வெள்ளை மண்ணால் நிரப்ப பட்டுள்ளது. அருகில் உள்ள வயலில் நெல் விளைந்து கதிர் அடிக்கும் பருவத்தில் உள்ளது. உபயம்: ஏதோ ஒரு கட்டிட நிறுவனம்!

நான் இன்ஃபோஸிஸ் அல்லது அந்த கட்டிட நிறுவனத்திற்கு அல்லது அவர்களின் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. ஆனால் அவர்களின் சுயநலத்திற்காக, தாயின் கருவறையை அறுத்தெரியும் அளவுக்கு கொடிய செயல் நெஞ்சை உலுக்குகிறது.

பெங்களூர் புறநகர் மாவட்டம், காய்கறி விளைச்சலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது அனைவருக்கும் தெரியும். அதை அழித்து விட்டுத்தான் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?

நம் நாட்டில் விவசாயம் செய்ய லாயக்கற்ற நிலங்கள் எவ்வளவோ இருக்கிறது. அதை தொழில் வளமாக்குங்களேன். பெங்களுரை விட்டால் வேறு ஊர்களே கர்நாடகத்தில் நாராயணமூர்த்தி அவர்களுக்கு தெரியவில்லையா? அவர் மனது வைத்தால், வறண்ட ஊர்களான பிஜப்பூர் போன்ற ஊர்களை இன்ஃபோஸிஸ் நகரம் ஆக்க முடியும்.

இந்தியா, மேல் நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியினால் அதிகம் பாதிக்கப்படாதற்கு முக்கிய காரணம், நமது வேளாண் தன்னிறைவு தான் முக்கிய காரணம்.

நமது நாடு பருவ மழையை நம்பியுள்ள நாடு. மழை பொய்த்தால் வறட்சி, அதிகம் பெய்தால் வெள்ளத்தினால் விளைச்சல் பாதிப்பு. 100 கோடி மக்களின் உணவு தேவை இயற்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உண்மை இது தான்.

இப்பொதே நாம் பருப்பு, சக்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மேலும் மேலும் நாம் நம் விளை நிலங்களை தினம்தோறும் இழந்து கொண்டிருக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால்… குழந்தைகள் எதிர்காலத்தில் அல்ல, நமது காலத்திலேயே உணவு திண்டாட்டம் வந்து விடும். அரிசி, பருப்பு விலையை கவனித்தாலே தெரியும்.. எல்லாவற்றுக்கும் ஆளும் அரசு தான் என்று அரசியல் கட்சிகளை போல் பொதுவாக குற்றம்சாட்டுவது தேவையில்லாதது.

‘விளைச்ச‌ல் குறைவு, தேவை அதிகம்’ இரண்டும் தான் விலையேற்றத்தின் முக்கிய காரணம்.

இதுக்கு தனி மனிதனாகிய நான் என்ன செய்ய முடியும். இது அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை என்று தோன்றுகிறதா?

யோசிப்போம்.. புதியதாக யோசிப்போம்!

-தினகர்

Comments

  1. அருமையான ஐடியா. நிச்சயம் இது சாத்தியமே. நன்றி!

உங்கள் கருத்தை பகிருங்கள்

*