படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

விவசாயிகள் சலுகைக் கட்டணத்தில் வேளாண் பட்டம், சான்றிதழ் படிப்பு படிக்கலாம்!

கோவை: விவசாயி என்பவன் கைநாட்டாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. விவசாயிகள் நினைத்தால் பட்டம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை, அதுவும் சலுகைக் கட்டணத்தில் படிக்க முடியும்.

அதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் தொலை தூரக் கல்வி வகை செய்கிறது.

இந்த மையத்தில் சேர்ந்து பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளைப் படிக்கலாம்.  இப்படிப்பில் சேரும் விவசாயிகளுக்கு ஐம்பது சதவிகித கட்டண சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

பட்டப்படிப்பு

இளநிலை பண்ணைத் தொழில்நுட்பம் (பி.எப்.டெக்) எனும் இந்தப் படிப்பில் பயிர் உற்பத்தி, பயிர் பாதுகாப்பு, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மனையியல், வேளாண் பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல், வனவியல், கால்நடை மேலாண்மை, சிறுதொழில் முனைதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பண்ணைப் பார்வையிடல் போன்ற பாடங்கள் இடம் பெறுகின்றன.

இந்த படிப்பு மூன்றாண்டு கொண்டதாகவும், ஆறு பருவங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இப்படிப்பில் சேர்ந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்.

இந்த படிப்பில் சேர விவசாயிகளின் வயது 30 நிரம்பியவராகவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தால் போதுமானது.

சான்றிதழ் படிப்புகள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திறந்த நிலை கல்வி இயக்ககம் மூலம்  சான்றிதழ் படிப்புகளிலும் விவசாயிகள் சேர்ந்து படிக்கலாம்.

முறையான கல்வி பெறாத விவசாயிகள் கல்வித் தகுதி பெறவும் அவர்களின் தன்னம்பிக்கை மேம்படவும், நவீன வேளாண் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தி அதிக விளைச்சல், வருவாயைப் பெருக்கிக்கொள்ளும் வகையிலும் புதிய சான்றிதழ் வகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

திறந்த நிலைக்கல்வி : நவீன கரும்புசாகுபடி தொழில்நுட்பங்கள், தோட்டக்கலை பயிர்களுக்கான நாற்றங்கால் தொழில்நுட்பங்களும் – பயிர் பெருக்கமுறைகளும், காளாண் வளர்ப்பு, பழங்கள்-காய்கறிகளைப் பதப்படுத்துதல், தரிசு நில மேம்பாடு, தேனி வளர்ப்பு, திடக்கழிவு-மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பங்கள், பண்ணைக்கருவிகள், இயந்திரங்கள் பழுதுபார்த்தலும்-பராமரித்தலும், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள், நவீன பாசன முறை மேலாண்மை, மூலிகைப்பயிர்கள், ரொட்டி-சாக்லெட் தயாரிப்பு தொழில்நுட்பங்கள், மலர் சாகுபடி தொழில்நுட்பங்கள், இயற்கை வேளாண்மை, நில எழிலூட்டல் மற்றும் அலங்கார தோட்டம் அமைத்தல், வணிக ரீதியான தோட்டக்கலை தொழில் நுட்பங்கள் ஆகிய 18 தலைப்புகளில் 6 மாத கால சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்த படிப்புகளில் சேர வயது வரம்பு இல்லை. எழுதவும், படிக்கவும் தெரிந்தால் போதும். ஆண்டு முழுவதும் இந்த படிப்புகளில் சேரலாம்.

மேலும் விபரங்களுக்கு இயக்குநர், திறந்தநிலை-தொலைநிலைக்கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம், கோவை-641003. என்ற முகவரியிலோ, 0422-6611229 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்தை பகிருங்கள்

*